புலியை எதிர்த்துப் போராடுவோம்

வழிபாடு-பேரம் அல்ல

பிரார்த்தனைஎன்பது, பேரம் பேசுவது இல்லை; யாசகம் கேட்பதுமல்ல; எதையாவது எப்பொழுதும் கேட்டுக்கொண்டு இருப்பதில்லை. மாறாக, கவனிப்பதில் இருக்கிறது.

இறைமை என்ன சொல்கிறது என்று உற்றுக்கேட்பது பிரார்த்தனை. மவுனமாக இருக்கின்றபோது, நம் மனத்தில் அத்தனைச் சப்தங்களும் அடங்கியபோது இறைமையின் உதடுகள் உச்சரிக்கின்ற ஒலிகள் நம் காதுகளில் விழும். அந்த நொடியில், நம் சக்திகளை எல்லாம் ஒன்று திரட்டி, அதை அன்பாக, கருணையாக, பிரார்த்தனையால் நாமே கருணையாக மாறிப்போனால் நம் எண்ணங்களும், கைகளும் பட்டால் ஆறாத ரணங்களும் ஆறும்; தீராத வலிகளும் தீரும்.

பிரார்த்தனை என்பது அன்பு செலுத்துவது; அன்பைப் பகிர்ந்துகொள்வது. தன்னிடம் அபரிமிதமாக இருக்கும் அன்பை வாரி வாரி வழங்க அது மேலும் மேலும் தொட்டனைத்தூறும் மணர்கேணியாய் ஊறும் அற்புத நிகழ்வு.

பிரார்த்தனையை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.முதல் நிலை- தனக்கு இது வேண்டும் அது வேண்டும், என்று எல்லா நேரமும் கடவுளிடம் கோரிக்கைகளை முன்வைப்பது. கடவுளுக்குப் பாலையும், பருப்பையும் தந்துவிட்டு-பதிலாக சங்கத் தமிழை விலையாகக் கேட்பது. இதைக் கடை நிலை என்றுதான் சொல்லவேண்டும்.

இரண்டாவது நிலையில், அது இன்னும் சற்று விரிவுபடுகின்றது. உலகத்தில் இருக்கும் மற்றவர்களுக்காக எல்லாம் வேண்டுவது. காயப்பட்ட மனிதர்களுக்காக, பசியில் வாடுகின்ற குழந்தைகளுக்காக, நோயில் அகப்பட்ட வயோதிகர்களுக்காக மனமிரங்கி கசிந்துருகிக் கண்ணீர் மல்குவது.

மூன்றாவது நிலை மிக உயர்ந்த நிலை, அங்கே எதுவுமே கேட்கப்படுவதில்லை. மாறாக இறைமை புலன்களின் வழியாக நுழைவதற்கு வசதி செய்துகொடுத்தல்.

புத்தர் ஒரு கதை சொல்வதுண்டு,

வயல் வழியாகச் சென்ற ஒரு மனிதன் புலியை எதிர்கொள்ள நேர்ந்தது. அவன் ஓடத்தொடங்கினான்.

புலியும் துரத்த ஆரம்பித்தது. அவன் ஒரு மலை உச்சிக்கு வந்தான். ஒரு காட்டுக்கொடியின் வேர்களைப் பிடித்துக் கீழே தொங்கினான்.புலியோ, மேலே இருந்து அவனைப் பார்த்து உறுமிக்கொண்டே இருந்தது.


நடுங்கிக்கொண்டே அவன் கீழே பார்த்தான். அங்கே இன்னொரு புலி அவன் கீழே விழுந்தால் சாப்பிடத்தாயாராக இருந்தது. 


அந்தக் காட்டுக்கொடியின் வேரின் பலத்தில்தான் அவன் தொங்கிக்கொண்டு இருந்தான். அந்த வேர் எப்பொழுது அறுந்தாலும் கீழே விழலாம் என்கின்ற நிலையில், இரண்டு எலிகள் அந்த கொடியைப் பல்லால் கடிக்க ஆரம்பித்தன.


இந்த சூழலில் ஒரு நெல்லிக்காய்ச் செடியை அவன் பார்க்க நேர்ந்தது. அதிலிருந்து ஒரு கையால் கொடியைப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் ஒரு நெல்லிக்காயப் பறித்து வாயில் போட்டுக்கொண்டான். ஆகா அது எவ்வளவு சுவையாக இருந்தது!

புத்தர் சொன்னகதை, இன்று வரை ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும்.

எந்த நிமிடமும் உயிரை இழந்துவிடலாம் என்கின்ற ஆபத்தில்கூட நெல்லிக்காயைச் சுவைத்துக் கொண்டு இருப்பதைப் போலப்
பல்லைக் காட்டிப் பயமுறுத்தும் பன்முகத் தன்மை கொண்ட வாழ்க்கையின் கொடிய கைகளில் இருந்து தப்பித்துக்கொள்ளப் பிரார்த்தனைக்குள் நாம் புகுகின்றோம்.

நமது பிரார்த்தனை என்பது ஒருவகையான தப்பித்தல்.

எந்த நிமிடத்திலும் நமக்குக் கிடைகின்ற நிவாரணம்.

நாம் மகிழ்ச்சி அடைந்துவிட முடியும்.

நம்மால் முடிந்ததைச் செய்துவிட்டோம் என்று திருப்தியடைந்துவிட முடியும்.


நெல்லிக்காயைச் சுவைப்பது எப்படி புலிகளிடமிருந்து தப்பிப்பதற்குத் தீர்வைத் தராதோ, அதைப்போல் நம் பிரார்த்தனை தீர்வாக இருக்க முடியாது. காரணம், புலியைக் கண்டு பயந்து ஓடுகிறவன் புலியால் துரத்தப்படுவான்.

எவன் புலியை எதிர்த்து நின்று போராடத் தயாராக இருக்கின்றானோ, அவன் தைரியத்தின் முன், புலிகூட பூனையாகிவிடுகின்ற சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. 


 பல நேரங்களில், நாம் எந்தப் பிரச்சனகளைப் புலி என்று நினைக்கிறோமோ அவை உண்மையில் பூனையைப்போல்தான் கையாளத் தகுந்தவையாக இருக்கின்றன.

பிரச்சனைகளைச் சந்திக்கத் துணிகின்றபோதே அவை காணாமல் போய்விடுகின்றன.

நாம் பிரச்சனைகளைக் கண்டு ஓடும்போதும் அவை நமக்கு முன்னால் போய் நிற்கின்றன.

உண்மை எப்பொழுதும் எதிர்மறையாய் இருக்கின்றது.

நம் துயரங்களுக்குக் காரணம் நாம்.
நம் பிரச்சனைகளுக்குக் காரணம் நாம்.
நம் பயங்களுக்குக் காரணம் நாம்.

’இளைதாக முள்மரம் கொல்க’ என்றார் வள்ளுவர்.

நாம் மரங்களை வளரவிட்டுக் கோடாரிகளைத் தேடுகிறோம். பிரச்சனைகளைப் பெரிதாக விட்டுவிட்டுப் பிரார்த்தனைகளுக்குப் போகின்றோம்.

-இறையன்பு அவர்களின் ‘ஏழாவது அறிவு’ நூலிலிருந்து.

No comments:

Post a Comment