எது வீரம் ?


பொது வாழ்வில் பதவி போனால் மரியாதை இல்லை.
தனி வாழ்வில் மனைவி போனால் மானமே இல்லை.


இரண்டையும் இழந்து தன் உறுதியால் இரண்டையும் தன் காலில் விழ வைத்த தன்னம்பிக்கைத் தலைவன் - யார்?



சில பேருக்கு யாரைக் கண்டாலும் எதற்கெடுத்தாலும் பயம். சிலருக்கு மேலதிகாரிகளிடம் பயம். சில மேலதிகார்களுக்கு தங்கள் ப்யூனிடம் பயம்! மாமுல் அவர் மூலம் வாங்கினால் பயம் இருக்காதா என்ன?

நமது பெண்கள் வீராங்கனைகள். புலியையே முறத்தால் விரட்டினாள் தமிழச்சி ஒருத்தி. அந்தத் தமிழ்ச்சாதிப் பெண்கள் இன்று கரப்பான் பூச்சியைக் கண்டால் கதறுகிறார்கள். அது சரி! அந்த கரப்பான் பூச்சிக்குப் பயப்படும் மனைவிக்கு, பயப்படும் கணவன் எந்த ஜந்து என்றே தெரியவில்லை.

அச்சம் மனித குல வளர்ச்சியின் நச்சு நோய். பக்தி அதை எதிர்க்கும் கிருமி நாசினி.

பயம் - இதன் எதிர்பதம் அபயம். எல்லாக் கடவுள் கைகளும் அபயம் என்ற முத்திரை காட்டுவதால் பயத்தின் எதிரி கடவுள்...மதம்...வ்ழிபாடு.

அச்சமின்மையே அமரத்வம். இறை நிலை. எதற்கும் அஞ்சாத பலரும் அஞ்சும் மரணத்திற்கு, ஞானி அஞ்சுவதில்லை.

”காலா என் காலருகே வாடா’ என்பது மகாகவியின் அறைகூவல்.
ஹிந்து தர்மத்தில் எல்லாக்கடவுளும் பாம்புடன் காட்சியளிப்பது ஏன்?
என்ன பொருள்?

பாம்பு என்பது பயமுறுத்தலின் அடையாளம்.
படையே நடுங்கும் என்பது பழமொழி.
ஆம் அச்சத்தின் அடையாளம் அரவு.
தெய்வங்களிடம் அது முடக்கி வைக்கப்பட்டிருப்பதால் அச்சமின்மை தெய்வீகம் என்று விளக்கப்படுகிறது.
அச்சமின்னை அமரத்வம். அது வாழ்வின் இலட்சியம்.
கிரேக்க அலெக்ஸாண்டரையும், சமண மத ஸ்தாபகரையும் மகா வீரர் என்றே அழைக்கிறோம்.
யார் உண்மையில் மகாவீரர்?


புத்திசாலிப் பையனிடம் இரண்டு படத்தையும் காட்டிக் கேட்டால் நிர்வாணமாக நிற்கும் சமண மத நிறுவனர் மகாவீரரைத்தான் காட்டுவான், ஏன்?
இரும்பு தொப்பி, ஈட்டி, கேடயம் சகிதமாக நம் சரித்திர புத்தகத்தில் அலெக்ஸண்டர் அச்சாகி இருப்பார்.
அவரது பாதுகாப்பு உடைகள் பயத்தின் வெளிப்பாடு. ஆயுதங்களோ அமைதி இன்மையின் அடையாளம்.
எதிர்க்க எவனுமே இல்லை என்ற மனோனிலையில் அச்சமின்றி ஆயுதமின்றி நிற்கும் சமணத் தலைவர்தான் மகாவீரர்.
சும்மாவா சொன்னாள் அவ்வை...
”புலனைந்தும் வென்றாந்தான் வீரமே வீரம்’
திருவதிகை வீரட்டானம்.

திருக்கோயில் தெருப்பகுதியில் புற்களைச் செதுக்குகிறார் ஒரு பெரியவர்.

புதிய கோயில் கட்டுவதை விட பழைய கோயிலை இடிய விடாமல் பாதுகாப்பது பெரிய பணி என்பது அவர் கொள்கை போலும்.

யார் அவர்? என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற தாரக் மந்திரத்தின் தந்தை அவர்.
அவர் தான் அப்பர்.

மனம் மாறி அதனால் மதம் மாறி இருந்த அவரைப் பழிவாங்க பல்லவப் பேரரசு சல்லடைப் போட்டுத் தேடியது. அரசரின் ஏவலர்கள் உரத்த குரலில்,
”ம் புறப்படு... கோமகன் அழைக்கிறார். குடிமகனே புறப்படு,” என்றனர்.

“நான் எந்த நாட்டுக்கும் குடிமகன் இல்லை. எனக்கு எவனும் கோமகனும் இல்லை,” மறுக்கிறார் பெரியவர்
.
”என்ன திமிர்... அரசாணையை மறுத்தால் எமனுக்கு உணவாவாய்...நரகம் செல்வாய்.”

”நமன் என்னை நெருங்கமாட்டான். நரகம் புக மாட்டேன்...” -இது நாவுக்கரசரின் நல்லுரை

இதோ பாடல்,
”நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப் படோம் நடலை இல்லோம்.”
இந்த திருநாவுக்கரசரின் தேவாரம் சைவ உலகின் வீர சாஸனம். அபயம், நிர்ப்பயம் இவை ஞான வீட்டின் வாசற்கதவுகள்!

“பூமியின் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்
பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்”
என்ற பாரதியின் ஆரவாரம் தமிழில் இருந்தே தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட தேவாரம்.

அரசியல் விடுதலையும் ஆன்மீக விடுதலையும் பின்னிய இந்திய விடுதலை உணர்வு கொண்ட ஏழாம் நூற்றாண்டின் ஞானத் தமிழன், பக்தி வேளாளன் திருநாவுக்கரசு கொடுத்த தெய்வப் பரிசு. மகாத்மாகாந்தி என்பது நாவுக்கரசரின் புனை பெயர்களில் ஒன்று என்ற கற்பனையில் நியாயமான சுகம் இருக்கிறது.

அரசும் அரசும் மோதின. பல்லவ அரசும் சொல் தவ அரசும் மோதின.

அரசு எந்திரங்கள் தனிமனிதனை நசுக்க முடுக்கி விடப்பட்டன.

திருநாவுக்கரசு சுண்ணாம்புக்காளவாயில் சிறை வைக்கப்பட்டார்.
ஆனால் அந்த வெப்ப விஷம் அவருக்கு,”மாசில் வீணை, மாலை மதியம், வீசு தென்றல், வீங்கிள வேனில், மூசுவண்டறை பொய்கை” ஆனது ஏன்?

அவரது மனம் ஈசன் எந்தை இணையடி நிழலில் இருந்தது.
சுடுவிஷம் அழிக்கவில்லை.

கல்லைக் கட்டிக் கடலில் பாய்ச்சியும் கலங்கவில்லை.

அந்த மகான் குன்று போல் நின்ற ஆனை ஒன்று காலை உயர்த்திக் கொல்ல வந்த போதும்
“அஞ்சுவது யாதொன்றும் இல்லை.
அஞ்ச வருவதும் இல்லை” என்று உதடுகள் உறுதி கூறி உச்சரித்தன.

மலையே வந்து வீழினும் மனிதர்காள் கலங்காதீர். என்ற அவர் ஞானத்துணிவு மனித குல மன நோய்க்கு மாமருந்து.
“ஈர அன்பினர் யாது குறைவிலர் வீரம்” என்ற சேக்கிழாரின் வரிகள் இவருக்கே பொருந்தும்.

வீரம் என்பது ஆயுதங்களில் இல்லை மனிதனின் மனத்தில் இருக்கிறது.

ஓர் உதாரணம்
இருபது தோள்கள்... இடுப்பெல்லாம் ஆயுதங்கள்... பத்துத் தலைகள்... பகர முடியாத படை பலங்கள்... இலங்கை ஏகாதிபத்தியம் கொண்ட இரும்பு அரக்கன் இராவணன் எதிரில் நிற்கிறான்.

மெலிந்த உடல்... நலிந்த நிலை... கண்ணீரால் ஆடை நனந்து வெப்பப் பெருமூச்சால் காயும், கிழிந்த கவிதையாக் இருக்கும் சீதை அமர்ந்திருக்கிறாள்;

இவர்களில் யார் வீரர்? அந்த மாமிச மலையை காமுகப் பாறையை ’ஏ துரும்பே’ என்று சீதை அழைக்கிறாள் என்றால் அதுவல்லவா வீரம்...

இதோ இன்னொன்று.

பாராளுமன்றம், சட்டம், போலீஸ், ராணுவம், வைஸ்ராய், நீதிமன்றம் என்று பத்து தலைகளுடன் இங்கிலாந்து ஏகாதிபத்தியம் இராவணனாகக் கொக்கரித்த போது-
நலிந்த நிலையில் இரண்டாவது சீதையாக இருந்து புதிய இராமாயணம் படைத்தார் காந்தியடிகள்... 

அதுவல்லவா வீரம்.
ஆயுதங்களில் வீரமிருப்பதாக யாரோ உளறி இருக்கலாம். கீழே போடுங்கள் நண்பர்களே

எல்லா ஆயுதங்களையும் இழந்த பின்னும் நம்பிக்கையக் இழக்காத அவிமன்யுவின் வீரம் இந்திய இளைஞனின் இலட்சியமாக இருக்கட்டும்.

அட்டைக் கத்தி செலுலாய்ட் வீரர்களுக்குக் கொடி காட்டுவதில் இளைஞர்களே நேரத்தை வீணக்க வேண்டாம்.

இராமாயணத்தைப் பலர் மோட்சகாவியம் என்பார்கள்.
ஆனால், அது தன்னம்பிக்கைப் பூங்கா. எப்படி?

எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காதே என்பது இராமாயணத்தின் ஒரு கோணம்.

பொது வாழ்வில் பதவி போனால் மரியாதை இல்லை.
தனி வாழ்வில் மனைவி போனால் மானமே இல்லை.

இரண்டையும் இழந்து தன் உறுதியால் இரண்டையும் தன் காலில் விழ வைத்த தன்னம்பிக்கைத் தலைவன் இராமன்.

இந்த கோணத்திலும் இராமாயணம்படிக்கலாம் தவறில்லை.

-சுகி.சிவம் எழுதிய நல்லவண்ணம் வாழலாம் என்ற நூலிலிருந்து.

No comments:

Post a Comment