புனித தலங்களில் நீராடுவதால் ஒருவரின் பாவங்கள் கரையுமா?

பிரார்த்தனைகள்

சடங்குகள், பூஜைகள், வழிபாடுகள்
இவற்றையும் மீறியது பக்தி.
சடங்குகள் பக்தி செய்கிறோம் என்கிற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி நம்மை மகிழ்ச்சியடையச் செய்கின்றன.

புனித தலத்திலே நீராடினால் நம் பாவங்களெல்லாம் கரைந்துவிடும் என நினைத்து, தெரிந்தே பாவங்கள் செய்பவர்கள் இருக்கிறார்கள்.

கபீர் தன்னுடைய தோஹேவில்

“புனித தலங்களில் நீராடுவதால் மோட்சம் கிடைக்கும் என்று சொன்னால்,
அங்கு ஏற்கனவே வசித்துக்கொண்டிருக்கும்
மீன்களுக்கும் தவளைக்கும் இந்நேரம் மோட்சம்
கிடைத்திருக்க வேண்டுமே!”

என்று கிண்டலாகக் குறிப்பிடுவார்.

Antony Demello ஒரு அழகிய உருவகக் கதையைக் கூறுவதுண்டு.

ஒரு குருவுடைய சீடர்கள் புனித யாத்திரை போக விருப்பத்துடன் இருந்தார்கள்-அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது எனத் தெரியவில்லை.
நேரடியாகச் சொன்னால் அது விளங்காது.
ஒரு செயலின் மூலம்தான் அதைப் புரிய வைக்கவேண்டும்.

அவர் ஒரு பாகற்காயைக் கொடுத்து எல்லாப் புனித நீரிலும் கழுவிக் கொண்டுவரச் சொன்னார்-

கழுவிவந்த பாகற்காய் கறி சமைக்கப்பட்டு எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.


குரு அதை சாப்பிடும்போது “எந்தப் புனித நீரும் இதை இனிப்பாக்க வில்லயே!” என்று சொன்னார்.

சீடர்களுக்குப் புரிந்தது.


Scape Goat-பலிகடா என்கிற வார்த்தை எப்படி வழக்கில் வந்தது என்பது மிகவும் சுவாரசியமான செய்தி.

யூதர்களுடைய குரு ஒரு விசேஷ நாளில் யூதர்களுடய பாவங்களையெல்லாம் ஒரு ஆட்டின் நெற்றிக்கு மாற்றுவார்-அந்த ஆடு பாவம் மனிதர்கள் செய்த எல்லாகுற்றங்களையும் சுமந்துகொள்ளும்-பிறகு ஆட்டைப் பலி கொடுத்து அந்த ஆட்டின் எல்லா பாவங்களையும் போக்குவார்கள்-அந்த ஆட்டைப் பலி கொடுத்தால், தங்கள் எல்லோருடைய பாவங்களும் நீங்கிவிடுவதாக ஐதீகம்.

அதைப்போலவே Whipping Boy என்கிற பதமும் பயன்படுகிறது.

இளவரசனைப் படிக்க அனுப்பும் போது, அவனுடன் இன்னொரு மாணவனும் அனுப்பபடுவான்.

இளவரசன் தவறு செய்தால் அவனை அடிக்க முடியாது. ஆனால் ஆசிரியர் கண்டிக்காமல் இருக்கவும் முடியாது-கண்டிக்காவிட்டால் ஆசிரியர் திருப்தியடைய முடியாது.

ஆசிரியருக்கும் திருப்தி ஏற்படவேண்டும்-
இளவரசனும் அடிபடக்கூடாது-
எனவே, ஆசிரியர் இளவரசன் மீது கோபம் வரும்போதெல்லாம் உடன் இருக்கும் மாணவனையடிப்பார்-

அவன் தான் ’சவுக்கடி பையன்’.

நமது சடங்குகள் மாயத்தோற்றம் ஏற்படுத்தி, நமது முன்னேற்றத்தைத் தடை செய்கின்றன.

ஆன்மிக வாழ்வில் மட்டுமல்ல சாதாரண தினப்படி வாழ்விலும் போலியான விஷயங்கள் நம்மை எளிதில் கவர்ந்துவிடுகின்றன.

நாம் உண்மையான செய்திகளை விட்டு விட்டுப் போலியானவற்றின் கவர்ச்சியில் திளைத்து விடுகிறோம்-

யார் போலியான அழகில் சிக்காமல் முன்னேறுகிறார்களோ, அவர்கள் உண்மையான அழகைக் கண்டுபிடிக்கிறார்கள். அது எவ்வளவு தத்ரூபமானது, ஆழமானது, ஆனந்தமானது என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்-

திரைப்படங்களில் கூட, போலித் திரைப்படங்களத் தாண்டினால்- நல்ல திரைப்படங்கள் கிடைக்கின்றன.

இலக்கியங்களில் போலி இலக்கியங்களைத் தாண்டினால், நல்ல இலக்கியம்-மேன்மையான இலக்கியம் அகப்படுகிறது.

உடல் அழகைக் கடந்து உட்புகுந்தால்-உண்மையான உள்மையம் தெரிகிறது.

அதைப் போலவே சடங்குகளைத் தாண்டினால்-


தியானம் நிகழ்கிறது.


-இறையன்பு அவர்களின் ’ஏழாவது அறிவு’ நூலிலிருந்து.

No comments:

Post a Comment