சல்லடையில் தண்ணீரை எப்படி நிரப்புவது?

இறைவன் இறந்துவிட்டார்.(God is Dead)
Fredrich Nietzsche தன்னுடைய நூலில், புத்தி சுவாதீனமற்றவன் பற்றிக் குறிப்பிடுகிறார்.
நல்ல வெளிச்சமான பகல்பொழுதில் விளக்கையேற்றிக் கொண்டு சந்தைப் பகுதிக்குச் சென்று தொடர்ந்து கூக்கிரலிட்டான்.
நான் கடவுளைத் தேடுகிறேன்;
நான் கடவுளைத் தேடுகிறேன்.”


அந்த போதில் கடவுளை மறுதலித்தவர்கள் பலர் அங்கே நின்றிருந்தனர்-அவர்கள் பலமாகச் சிரித்தனர்.
தேடுகிறாயே நீ எங்கே அவரைத் தொலைத்தாய்?’ என்றான் ஒருவன்.
அவர் என்ன குழந்தையைப்போல் வழியைத்தொலைத்துவிட்டாரா?’ என்றான் இன்னொருவன்.
“அவர் எங்களிடம் பயந்து ஒளிந்துகொண்டிருக்கிறாரா?
அவர் என்ன யாத்திரை சென்றிருக்கிறாரா?
அந்த புத்தி சுவாதீனமற்றவன் குதிதெழுந்து அவர்களை ஊடுருவிப் பார்த்தான்.
“ எனக்குத் தெரியும்-கடவுள் எங்கென்று-
நாம்தான் அவரைக் கொன்றுவிட்டோம்-
நீங்களும், நானும்தான்­­-
நாம்தான் கொலைகாரர்கள்-
ஆனால் எப்படி இது சாத்தியமாயிற்று?.
எப்படி கடலை நம்மால் குடிக்க முடிந்தது?
எப்படிக் கடற்பஞ்சால் முழு மண்டலத்தயும் அழித்துவிட்டோம்-
நாம் பூமிக்கும் சூரியனுக்குமிருந்த சங்கிலிப் பிணைப்பைத் துண்டித்துவிட்டோம்-
நாம் தொடர்ந்து சூரியன்களிடமிருந்தெல்லாம் தொலைவில் சென்றுகொண்டிருக்கிறோம்-
நாம் தொடர்ந்து அதலபாதாளத்தில் விழுந்து கொண்டேயிருக்கிறோம்
நாம் தொடர்ந்து கடவுளைப் புதைப்பதற்க்காகக் குழி தோண்டுபவர்களுடைய கைகளில்
மண்வெட்டி ஓசைகளைக் கேட்டுக்கொண்டேயிருக்கிறோம்-
கடவுள்கள் அழுகிக் கொண்டிருப்பதை நம்மால் நுகரமுடியவில்லையா?
கடவுள் இறந்துவிட்டார்-
கடவுள் இறந்தே நீடிக்கிறார்-
கொலைக்காரர்களான நாம் எப்படி ஆறுதலடைவது?
நாம் எந்தத் தண்ணீரால் நம்மைச் சுத்திகரிக்கப் போகிறோம்?
எந்த திருவிழாவைக் கொண்டாடி பிராயச்சித்தம் தேடப்போகிறோம்?
”கடவுள் இறந்துவிட்டார்’ என்று எழுதி கீழே கையொப்பமிட்டது மிகச் சிறந்த ஆன்மீக அறிவின் வெளிப்பாடு-
உச்சக்கட்ட உணர்தலின் போதுதான், இப்படிப்பட்ட ஞானக்கதிர்கள் தெறித்துவிழும்-
கடவுள் என்பது வடிவம் அல்ல; தன்மை-
’முருகு’ என்ற சொல்லுக்கு அழகு, இளமை, கடவுட்தன்மை போன்ற பொருள்கள் உண்டு என்று திரு.வி.க கூறுவார்.
கடவுள் தன்மையை நாம் தொடர்ந்து சிதைத்து வருகிறோம்.
நேர்மையின்மை-
துரோகம்-
ஏமாற்று வேலை-
பேராசை-
வன்மம்-
பொறாமை-
திருட்டு-
அதீத சுயநலம்(தன்முனைப்பு)
என்று எண்ணற்ற கடப்பாரைகளைக் கொண்டு நமக்குள் இருக்கும் கடவுட்தன்மையை நாம் தொடர்ந்து கொன்று கொண்டிருக்கிறோம்-
ஒருமரத்தை வெட்டும் போது இறைமை இம்சிக்கப்படுகிறது-
எந்த உயிரைத் தேவையில்லாமல் நாம் கீறும் போதும் நாம் கடவுட்தன்மையைச் சிதைக்கிறோம்-
கடவுள் என்பது-இறைமை என்பது-நாம் கொடுத்திருக்கும் வடிவங்களைத் தாண்டி பெரியது-அளவிடற்கரியது-அனைத்தையும் உள்ளடக்கியது.
இருளையும், ஒளியையும்
வடிவத்தையும், வெற்றிடத்தையும்
காற்றையும், காற்று மண்டலத்தையும்
மரங்களையும், மலர்களையும்
எல்லா முரண்களையும், எல்லா இரு பக்கங்களையும் உள்ளடக்கியது.
காற்றைக் களங்கப்படுத்தும் பொழுதும்,
மலர்களைக் கசக்கும் போதும்
ஒரு பட்டாம்பூச்சியின் இறகுகளை சிதைக்கும் போதும்,
காளையைக் காயடித்து எருதாக்கும் போதும்,
இன்னொரு மனிதனின் காயத்தை கண்டு களிக்கும் போதும்,
நமக்குள் இருந்த கடவுள்தன்மையும்-
நம்மை சுற்றி இருக்கும் கடவுள் தன்மையையும்
சின்னச் சின்ன அற்ப லாபங்களுக்காகத் தொலைத்து விட்டோம்.
NIETZSCHE -கடவுள் இறந்ததாகச் சொல்லுவது-
அவராக இறந்ததாக, இல்லாமல் போனதாகச் சொல்லுகிற நோக்கில் அல்ல- கடவுளின் கண்ணுக்குத் தெரியாத அகண்ட ஆசீர்வதிக்கும் உள்ளங்கையிலிருந்து நாம் நழுவிக்கொண்டிருக்கிறோம் என்கிற எழுதப்படாத எச்சரிக்கை- அவர் உதடுகளின் மூலம் உச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சூரியனிடமிருந்து சங்கிலிப் பிணைப்பைத் துண்டித்ததால் நாம் இருளில் இருக்கிறோம்.
நம் கால்கள் நழுவுவது... முடிவில்லாத பாதாளத்தை நோக்கி...
நமக்குத் தெரியாததை நோக்கி....
தெரிந்ததின் விளைவாக ஏற்படும் பயத்தைக் காட்டிலும் அதிகமான பயத்தை அந்த தெரியாத இடம் தோற்றுவிக்கும்.
ஒரு குரு தன் சீடர்களிடம் போதித்துக் கொண்டிருந்தபோது
ஒரு சீடன் நாம் விழிப்புணர்வு அடைவது எப்படி?” என்று கேட்டான்.
அது நம்மை இறைமையால் நிறைத்துக்கொள்ளும்போது நிகழ்கிறது.”
புரியவில்லை
சல்லடையில் தண்ணீரை நிரப்புவது போன்ற முயற்சி.”
சீடர்கள் அனைவரும் சல்லடைகளைக் கையிலேந்தி, தண்ணிரை நிரப்ப முயற்சி செய்தார்கள்- ஊற்ற ஊற்ற தண்ணீர் கீழே வழிந்தோடியது-
சரி இது முடியாதகாரியம்என்றுதான் குரு மறைமுகமாகச் சொல்லியிருக்கிறார் என நினைத்தார்கள்.
குருவிடம் சென்று சல்லடையை நீரால் நிரப்பவே முடியாதேஎன்று கவலையுடன் நின்றார்கள்.
ஏன் முடியாது? சல்லடையைக் கொண்டுவாருங்கள்
சல்லடையைத் தூக்கி அருகில் இருந்த ஆற்றில் எறிந்தார், சல்லடை நீரில் மூழ்கியது.
இப்போது பாருங்கள் - சல்லடை நீரால் நிரம்பிவிட்டது-உங்களைத் தூக்கி இறைமைக்குள் எறியுங்கள்-நீங்கள் நிறைந்துவிடுவீர்கள்.”
அப்படிச் செய்தால் இறைமை நமக்குள் துளிர்க்கும்-கடவுள் மறுபடி உயிர்த்தெழமுடியும்.




-இறையன்பு அவர்களின் ’ஏழாவது அறிவு’ நூலிலிருந்து.

No comments:

Post a Comment