சத்திய சோதனை

மனத்தூய்மை இல்லாதார் என்றுமே கடவுளை அறிதல் இயலாது
-மகாத்மா காந்தியின் சுய சரிதை - அதிலிருந்து சில வரிகள் நம் சிந்தனைக்கு

பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொருபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின் மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப்போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும்.


அந்நிலையை அடைந்து விட ஆசைப்படுகிறவர் யாரும், வாழ்க்கையின் எந்தத் துறைலிருந்தும் விலகி நின்று விட முடியாது. அதனாலயே, சத்தியத்தினிடம் நான் கொண்டிருக்கும் பக்தி, என்னை ராஜீயத் துறையில் இழுத்து விட்டிருக்கிறது.

சமயத் துறைக்கும் ராஜீயத்திற்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்று கூறுவோர்,சமயம் என்பது இன்னதென்பதையே அறியாதவர்களாவர். இதை கொஞ்சமேனும் தயக்கமின்றி, ஆயினும் முழுப் பணிவுடன் கூறுவேன்.

தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டு விடாமல் எல்லா உயிர்களிடத்திலும் தன்னை ஒன்றுபடுத்திக் கொள்ளுவது என்பது முடியாத காரியம் தம்மைத் தாம் தூய்மைப் படுத்திக் கொள்ளாமல் அகிம்சை தருமத்தை அனுசரிப்போமென்பது வெறும் கனவாகவே முடியும்.

மனத்தூய்மை இல்லாதார் என்றுமே கடவுளை அறிதல் இயலாது. ஆகையால், தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக் கொள்ளுவது என்பது, வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் தூய்மை அடைவதாகும்.
தூய்மைப்படுத்திக் கொள்ளுவது என்பது, வெகு விரைவில் மற்றவர்களுக்கும் தொத்திக்கொள்ளும் தன்மை உடையதாகையால், ஒருவர் தம்மைத் தாமே தூய்மைப்படுத்திக் கொள்ளுவதனால், அவசியமாக தம்முடைய சுற்றுச் சார்பையும் தூய்மைப்படுத்தி விடுவதாகிறது.

ஆனால் ஆன்மத் தூய்மைக்கான மார்ககம் மிகவும் கஷ்டமானதாகும் பூரணத் தூய்மையை ஒருவர் அடைவதற்கு, அவர் எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் காமக் குரோதங்களை அறவே நீக்கியவராக இருக்க வேண்டும். அன்பு துவேஷம், விருப்பு-வெறுப்பு என்னும் எதிர்ப்புச் சுழல்களினின்று அவர் வெளிப்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

அம்மூவகைத் தூய்மையையும் அடைவதற்காக இடைவிடாடது நான் முயற்சி செய்து கொண்டு வருகிறேனாயினும், அந்த மூன்று தூய்மைகளும் இன்னும் என்னுள் இல்லை என்பதை நான் அறிவேன்.
இதனாலயேதான் இவ்வுலகத்தின் புகழுரைகளெல்லாம் எனக்கு இன்பம் தருவதில்லை; உண்மையில் அவைகளினால் எனக்கு அடிக்கடி மனக் கஷ்டமே உண்டாகிறது.

ஆயுத பலத்தைக் கொண்டு உலகத்தையே வெற்றி கொண்டுவிடுவதைவிட, உள்ளுக்குள் இருக்கும் காமக், குரோத உணர்ச்சிகளை வென்று விடுவது அதிகக் கஷ்டமாக எனக்குத் தோன்றுகிறது.

நான் இந்தியாவிற்குத் திரும்பியதிலிருந்து, என் உள்ளத்தினுள்ளே மறைந்துகொண்டு தூங்கிக் கிடக்கும் ஆசாபாசாங்களை நான் அனுபவித்து வருகிறேன். அவை இன்னும் என்னிடம் இருந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதைப்பற்றிய எண்ணம், நான் தோல்வியுறும்படி செய்து விடவில்லையாயினும், அவமானப்படும்படி செய்கிறது.

அனுபவங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெற்றிருக்கச் செய்து எனக்கு ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால், இன்னும் நான் கடக்க வேண்டிய மிகக் கஷ்டமான பாதை என் முன்னால் இருக்கிறது என்பதை அறிவேன்.

என்னை நான் அணுவிற்கும் அணுவாக்கிக் கொண்டு விட வேண்டும். தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் தன்னைக் கடையனாகத் தானே விரும்பி ஒரு மனிதன் வைத்துக்கொண்டு விடாத வரையில் அவனுக்கு விமோசனமே கிடையாது. அடக்கத்தின் மிகத் தொலைவான எல்லையே அகிம்சையாகும்.

No comments:

Post a Comment