இறைவனை முழுமையாக அறிந்து கொள்ள முடியுமா?

நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஒருவிதமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில் வாழும் நாமும் ஒரு ஆற்றின் ஓட்டத்தைப் போன்று தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறோம். நமது செயல்கள் நம் விருப்பப்படியே நிகழ்கின்றன எனவும் நாம் நினைக்கிறோம். ஆனால் சிறிது சிந்தித்துப் பார்த்தால் அப்படி இல்லை என்று புரியும். எதோ ஒரு பெரும் இயந்திரத்திற்குள் நாம் சுழன்று கொண்டிருக்கிறோம்.

அடிப்படை மூலப்போருள்களின் பலவித கூட்டினைப்பினால் உருவான உலகம் என்றும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.  இத்தகைய செயல்பாடுகளுக்கு ஆதிமூலமான ஒரு காரணம், செயல்களை செய்யத்தூண்டும் முதல் உந்துதல் சக்தி ஒன்று இருந்திருக்க வேண்டும். பிரபஞ்சத்தின் முறையான வடிவமைப்பும், அதில் காணப்படும் வெளிப்படையாக தெரியும் நுண்ணறிவும் உலகத்திற்கு பின்னால் அதை உருவக்கிய ஓர் அறிவுப்பூர்வமான சக்தி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நமது அழகு, ஆனந்த அனுபவங்களும் இவைகளுக்கு ஆதாரமாக ஏதோ ஒன்று உள்ளதையே தெளிவுபடுத்துகிறது.

நமது எல்லைக்குட்பட்ட நிலையிலும்கூட நம்முள் எழுகின்ற எல்லையற்ற எண்ண உணர்வு அலைகள், எல்லாவற்றிற்க்கும் ஆதாரமான எல்லையற்ற, பரந்த ஒரு சக்தியை குறிப்பாக உணர்த்துகிறது. நமது சாஸ்திரங்களும் ஞானிகளின் கருத்துகளும் இதனையே உறுதி செய்கின்றன. இவைகளை கருத்தில் கொண்டு மனித மனம் எல்லையற்ற முழுமையான ஒன்றை, எல்லாவற்றிற்க்கும் மூலகாரணமாகவும், பிரபஞ்சத்தை கட்டுப் படுத்துவதாகவும் உருவகப்படுத்திக் கொள்கிறது. அத்தகைய பரந்த, எல்லையற்ற ஒன்றை மனித மனம் எப்படி புரிந்து கொள்ள முடியும்?

உலகியல் நிலையில், புலன்களின் பிடியில் உள்ள நாம் நமது தகுதிக்கு ஏற்பவே அதனை புரிந்து கொள்ள முயல்கிறோம். எனவே அது முழுமையான அறிவாக இருக்க இயலாது. கடலுக்கு நீர் எடுக்கச் சென்றவன் தான் கொண்டு செல்லும் பாத்திரத்தின் அளவுக்கு ஏற்ப நீரை எடுத்துச் செல்வதைப் போன்றது அது. தனிமனிதனின் மன நிலைக்கு ஏற்ப அவன் இறைவனை அறிந்து கொள்கிறான். அந்த அறிவு உண்மையாக இருந்தாலும், அது உண்மையின் ஒரு பகுதியே. இறைவன் இவ்வாறு ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.

எனவே உடல் மனம் என்ற கூட்டுக்குள் இருந்து எல்லையற்ற இறைவன் என்ற பரம்பொருளை அறிந்துகொள்ள முயன்றால், அது பகுதியான உண்மையாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் எப்போது ஒருவன் தனது மனத்தை கடந்து ஆன்மாவில் நிலைத்து நிற்கிறானோ, அப்போது அந்த் பரம்பொருளின் உண்மையை அதனுடன் ஒன்றிணைந்து அறிந்து கொள்கிறான். மனதை கடந்து செல்லாத மற்றவர்கள் இறைவனைப் பற்றிய பகுதி கருத்தையே கொண்டிருக்க முடியும் .

இறைவன் என்ற அந்த சக்தி ஆணா, பெண்ணா? மனம்-உடல் கடந்த நிலையில் மட்டுமே இறைவனை அறிந்து கொள்ள முடியும் என்று கூறும்போதே இதற்கான விடை கிடைத்துவிடுகிறது. மனிதன் உடல்-மனம் என்ற பந்தத்திற்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாத நிலையில் இறைவனை நினைக்கும்போது அவரை உருவத்துடன் கூடிய ஒரு மாபெரும் சக்தியாக மட்டுமே எண்ண முடியும். அப்போது அந்த இறைவன் தந்தை,தாய், குழந்தை என்று பலவாறு உருவகப்படுத்திக்கொள்ளப்படுகிறார். அதே நேரத்தில் இறைவன் உருவமற்றவராகவும் இருப்பதை உள்ளுணர்வு நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

இறைவன் என்ற அந்த பகவான் ஆறு குணங்களைக் கொண்டிருப்பதாக விஷ்ணு புராணம் விளக்குகிறது. அவர் சக்தி, தர்மம், புகழ், அழகு, ஞானம், வைரக்கியம் என்ற குணங்களை கொண்டு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். புராணங்களில் இறைவன் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபாவம், அனுராகம் என ஐந்து விதமான செயல்களைச் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

சிருஷ்டியில் இறைவன் உலகைப்படைக்கிறார். ஸ்திதியில் உலகைக் காக்கிறார். சம்ஹாரத்தில் உலகை அழிக்கிறார். திரோபாவத்தில் தன்னை மறைத்துக்கொள்கிறார். அனுராகத்தில் தமது அனுக்கிரஹத்தை அளிக்கிறார். எத்தனை விதங்களில் இறைவனை நாம் இவ்வாறு விளக்கினாலும்,அவர் எல்லாவிதமான விளக்கங்களுக்கும் அப்பாற்பட்டு நமது மனத்திற்கு எட்டாதவராக எல்லையற்றவராகவும் விளங்குகிறார் என்பதே உண்மை.


-சுவாமி தபஸ்யானந்தர்.

No comments:

Post a Comment