என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபச்சாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார் - மகாத்மா காந்தியின் சத்தியசோதனையிலிருந்து

”என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபச்சாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் எவ்விதம் நடந்து கொள்ளவேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என்னை உள்ளே அனுப்பினார். 


எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாயிற்று. பாவத்தின் வாய்க்குள் போய்விட்டேன்.


ஆனால்,கடவுள் எல்லையில்லாக் கருணையினால் என்னைத் தடுத்துக் காத்தார். 


இந்தப் பாவக்குழிக்குள் போனதுமே பார்வையை இழந்தவன்போல் ஆகி விட்டேன். பேசவும் நாஎழவில்லை. படுக்கையில் அப்பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன். ஆனால் ஒரு வார்த்தை கூட என்னால் பேச முடியவில்லை.


ஆகவே, அவள் பொறுமையை இழந்துவிட்டாள். என்னைத் திட்டி, அவமதித்து, வெளியே போகச் சொல்லிவிட்டாள்.


எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு எற்பட்டு விட்டதாக அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான் பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினேன்.


ஆனால், என்னக் காத்தருளியதற்காக அப்பொழுதிலிருந்து நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். என் வாழ்க்கையில் இதுபோலவே நடந்த மற்றும் நான்கு சம்பவங்களும் எனக்கு நினைவிருக்கின்றன.


அநேகமாக இவற்றிலெல்லாம் என்னளவில் நான் செய்த முயற்சியைவிட எனது நல்லதிருஷ்டமே என்னைக் காத்தது. கண்டிப்பான அறநெறியைக் கொண்டு கவனித்தால், இந்த சம்பவங்களையெல்லாம் ஒழுக்கத் தவறுகள் என்றே சொல்ல வேண்டும்.


ஏனெனில், மனதில் சிற்றின்ப இச்சை இருந்தது; அது காரியத்தைச் செய்துவிட்டதற்குச் சமமே. ஆனால், சாதாரண நோக்கோடு கவனிப்பதாயின், உடலினால் ஒரு பாவ காரியத்தைச் செய்துவிடாதவன் காப்பாற்றப்பட்டவனே என்று கருதப்படுவான்.


நான் காப்பாற்றப்பட்டேன் என்பதும் இந்த அர்த்ததிலேதான்.
சில செயல்களிலிருந்து தப்புவது, அப்படித் தப்புகிறவனுக்கும் அவனைச் சுற்றியிருப்போருக்கும் தெய்வாதீனமாக நிகழும் ஒரு காரியமாக இருக்கிறது.


அவனுக்கு நல்லது இன்னதென்பதில் திரும்ப உணர்வு ஏற்படும்போது, அவ்விதம் தப்பிவிட்டதற்காக கடவுளின் கருணைக்கு நன்றியுள்ளவனாகிறான்.


மனிதன் என்னதான் முயன்றாலும், அது முடியாமல் அடிக்கடி ஆசையின் வலையில் சிக்கிக் கொண்டு விடுகிறான் என்பதை நாம் அறிவோம். அப்படி அவன் சிக்கிக்கொண்டாலும், கடவுள் குறுக்கிட்டு அவனைக் காத்து வருவதும் உண்டு என்பதையும் அறிவோம்.


இவையெல்லாம் எவ்விதம் நிகழுகின்றன? மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான்?
எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான்? விதி எங்கே வந்து புகுகிறது? என்பனவெல்லாம் நம்மால் அறிய இயலாத மர்மங்கள். அவை என்றும் மர்மங்களாகவே இருந்துவரும்.”

”என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கு ஒரு காரணம் இந்த நண்பரோடு நான் சேர்ந்த்திருந்ததே என்பதில் சந்தேகமில்லை.


மனைவியிடம் அளவற்ற அன்பும் சந்தேகமும் கொண்ட கணவன் நான். என் மனைவிமீது நான் கொண்டிருந்த சந்தேகத்தீயை இந்த நண்பர் ஊதி வளர்த்துவிட்டார்.


அவருடைய கூற்று உண்மைதானா என்று நான் சந்தேகிக்கவே இல்லை. அவர் கூறியவற்றைக் கேட்டுவிட்டு என் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்தேன். இவ்வாறு இம்சை புரிந்த குற்றத்திற்காக என்னை நான் ஒருபோதும் மன்னித்துவிடவில்லை.


அநேகமாக ஒரு ஹிந்து மனைவியே இத்தகைய கஷ்டங்களையெல்லாம் பொறுமையாக சகித்துக்கொள்ள கூடும். இதனாலயே பெண்ணைப் பொறுமையின் அவதாரம் என்று போற்றுகிறேன். 


ஒரு வேலைக்காரனைத் தவறாகச் சந்தேகித்து விட்டால் அவன் வேலையைவிட்டுப் போய் விடுவான். அதேபோல, மகனைச் சந்த்தேகித்தால் தந்தையின் வீட்டைவிட்டே அவன் வெளியேறிவிடுவான். நண்பனைச் சந்தேகித்தால், நட்பை முறித்துக்கொள்ளுவான். மனைவி தன் கணவன் பேரில் சந்தேகம் கொண்டால் சும்மா இருந்து விடுவாள். ஆனால், அவள் மீது கணவன் சந்தேகம் கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே.


அவள் எங்கே போவது? ஒரு ஹிந்து மனைவி கோர்ட் மூலம் விவாகரத்துப் பெற முடியாது. சட்டத்தில் அவளுக்குப் பரிகாரம் இல்லை. என் மனைவியையும் நான் இத்தைகைய நிர்க்கதியான நிலைமைக்குக் கொண்டு போய்விட்டதை என்னால் மறக்கவே முடியாது; என்னை மன்னித்துவிடவும் முடியாது.

அகிம்சா தருமத்தை, அதன் எல்லா அம்சங்களிலும் நான் உணர்ந்த பின்னரே, சந்தேகத்தின் புரை என்னைவிட்டு ஒழிந்தது. அப்பொழுதுதான் பிரமச்சரியத்தின் மகிமையை உணர்ந்தேன்.

அப்பொழுதுதான் மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணவியும், தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுக துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப்போலத் தன் வழியில் நடந்து கொள்ள அவளுக்குச் சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்துகொண்டேன்.

அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் நிரம்பிய அந்த இருளான நாட்களைக் குறித்து எண்ணும்போதெல்லாம் என்னுடைய தவறுக்காகவும், காமக் குரூரத்துக்காகவும் என்னையே நான் வெறுத்துக் கொள்ளுகிறேன். என் நண்பரிடம் நான் கொண்டிருந்த குருட்டுத்தனமான ஈடுபாட்டுக்காகவும் வருந்துகிறேன்.”

- மகாத்மா காந்தியின் சுய சரிதையிலிருந்து.

No comments:

Post a Comment