படித்ததில் பிடித்தது-8

சுதந்திரம்.

சுதந்திரம் ஒரு சொப்பனமயமான பொய்.

உண்மையில் நாம் சுதந்திரத்தை விரும்புவதில்லை, சிறைகளையே விரும்புகிறோம்.

சுதந்திரத்தை நாம் விரும்புகிறோம் என்றால் மரணத்தைக் கண்டு ஏன் அழுகிறோம்? சகல தளைகளிலிருந்தும் விடுதலை அடையும் பரிபூரண சுதந்திரமல்லவா அது?

சிறைப்படுவதை நாம் வெறுக்கிறோம் என்றால் திருமணத்தை ஏன் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்? ஆயுள் சிறையல்லவா அது?

சுத்தமான அர்த்தத்தில் நாம் சுதந்திரமாக இருக்கமுடியுமா?

முடியாது.

நாம் உருவாவதே சிறையில்தான்; கருப்பைச் சிறையில்.

வாழ்வது சிறைகளில்தான்.

பிரசவம் என்பதும் விடுதலை அல்ல;சிறை மாற்றம்; சின்னச் சிறையில் இருந்து பெரிய சிறைக்கு.

வாழ்க்கை என்பது புதுப்புது விலங்குகளைத் தயாரிக்கும் பட்டறை.

இயற்கையில் எதுவும் சுதந்திரமாக இல்லை.

அண்ட சராசரங்கள் ஆகர்ஷணத்தின் அடிமைகள். உயிர் உடலின் கைதி.உடல் உணர்ச்சிகளின் கொத்தடிமை. பாசம், அன்பு, நேசம், நட்பு என்பவை விலங்குகளே; கண்ணுக்குத்தெரியாத நுண்ணிய விலங்குகள்; பூ விலங்குகள்.

இரும்பு விலங்குகளை உடைத்துவிடலாம்; இந்த பூ விலங்குகளை அறுப்பது எளிதல்ல.

இந்த விலங்குகளில் இருந்து விடுபட யார் விரும்புவார்கள்? இந்த விலங்குகளை ஆபரணங்களாக அணிந்து கொள்ள அல்லவா இதயம் ஆசைப்படுகிறது.

பந்தம் பாசம் என்பவை என்ன? விலங்குகளின் அழகான பெயர்கள்தாமே.

நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொருவிஷயமும் நமக்கு விலங்காகிறது. நாம் அதற்கு அடிமையாகிறோம். அதிகமான விலங்குகளை அணிகிறவன் அறிஞன் ஆகிறான்.

அடிமையாக இருப்பதே ஆனந்தம் என்பதற்குக் காதல் துறையை விடச் சான்று வேறென்ன வேண்டும்.

அந்தச்சிறைதான் எவ்வளவு அதிசயமான சிறை! அங்கே கைதியாவதற்கல்லவா போரட்டம் நடக்கிறது!

தத்துவம், சித்தாந்தம், லட்சியம் என்று ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு சிறை.

சிலர் பிறருடைய சிந்தனைகளுக்குக் கொத்தடிமை ஆகிறார்கள். சிலர் தங்கள் சொந்த எண்ணங்லளிலேயே சிறைபட்டுக் கொள்கிறார்கள்.

சுதந்திரமாக இருக்க யாருமே விரும்புவதில்லை. பற்றையெல்லாம் விட்டு விடு’ என்று உபதேசிக்கிறவர்களும் விடுதலைக்கு வழிகாட்டவில்லை. மற்றொரு சிறையையே பரிந்துரைக்கிறார்கள்; ‘பற்றற்றான் பற்று’ என்ற சிறையை.

விடுதலை என்று சொல்லும்போது நாம் விரும்புவது எல்லாத்தளைகளிலிருந்தும் விடுபடும் விடுதலையை அல்ல. நாம் விரும்பாத விலங்குகளிலிருந்து விடுபடும் விடுதலையை.

உண்மையில் சுதந்திரம் என்பது சிறைகளைச் சுயமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமைதான்.

சில சிறைகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம். சில சிறைகள் நம்மைத் தேர்ந்தெடுக்கின்றன.

சில விலங்குகளை நாமே தாயாரித்துக் கொள்கிறோம். சில விலங்குகள் பிதுரார்ஜிதமாகக் கிடைக்கின்றன.

நாம் சொந்தச் சிறைகளின் கைதிகளாக இருப்பதையே விரும்புகிறோம்.

உலகத்தில் நடக்கும் விவாதமெல்லாம் எந்தச் சிறை சிறந்தது என்பதைப்பற்றித்தான்.

மனிதர்களின் பிரச்சனையெல்லாம் சொந்த விலங்குகளைத் தயாரித்துக் கொள்ளும் உரிமை பற்றிய பிரச்சனைதான்.

உங்களுக்கு சிறகுகள் வேண்டுமா?

பட்டுப் பூச்சியைப் போல் உங்கள் கூட்டுக்குள் சிறையாயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் நறுமணமாக வேண்டுமா? காற்றிப்போல் இதழ்களுக்குள் கைதியாக இருக்கத் தெரிந்துகொள்ளுங்கள்.
நீங்கள் அணையாமல் ஒளி வீச வேண்டுமா சுடரைப்பால் ஒரு சிம்னிக்குள் சிறைபட ஒப்புக்கொள்ளுங்கள்.
உங்களிடம் பூக்கள் மலர வேண்டுமா? நீரைப்போல் கரைகளுக்குக் கட்டுப்படக் கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் சிறைகளைப்பற்றி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனென்றால் உங்களுடைய பெருமையெல்லாம் நீங்கள் எந்தச்சிறையின் கைதிகள் என்பதைப் பொறுத்திருக்கிறது.

No comments:

Post a Comment