ஜாதகம், ஜோதிடம் இவையெல்லாம் உண்மையா?



ஜாதகம், ஜோதிடம் இவையெல்லாம் உண்மையா?
அனைவர் மனதிலும் தொக்கி நிற்கும் கேள்வி.

இந்த கேள்விக்கு பதில் தேடும் முன், நம்மில் எத்தனை பேருக்கு ஜோதிடத்தில் அதன் அடிப்படையான நட்சத்திரம்,ராசி,நவாம்சம், புத்தி, தசாபுத்தி, கிரகம் பற்றிய விவரம் தெரியும்.

ஜோதிடம் தோன்றிய காலத்திற்கும், தற்போது உள்ள காலத்திற்கும் இடையே, ஜோதிடம் எந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளது அல்லது அதில் கூறப்பட்ட விஷயங்கள் காலப்போக்கில் எந்த அளவு மறைந்துள்ளன என்பது பற்றி தெரியும்.

எதுவுமே தெரிந்து கொள்ளாமல் ஜோதிடம், ஜாதகம் என்பது எல்லாம் பொய் அதில் எள்ளளவு கூட உண்மை இல்லை என்று கூறுவது சரிதானா?.
இப்படி எதைப்பற்றியும் தெரிந்துகொள்ளாமல் ஜோதிடம் என்பது பொய், அதில் உண்மை இல்லை என கூறுவோறும் உண்டு.

ஜோதிடம் பார்த்து கூறுவோர் சொல்வது எல்லாம் உண்மை என்று நம்பி, இதுவே நம் கதி என்று மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ள சிலரும் உண்டு.
எதை, யார், எப்படி கூறினாலும் அதில் உள்ள உண்மை நிலை என்ன? என்பதை அலசி ஆராய்ந்து அதில் உண்மை நிலையை கண்டு உணர மிகச்சிலராலயே முடிகிறது.

யாரும் தன்னுடைய ஜாதகத்தை பார்த்து பலன் அறிய விரும்பினால் முதலில் ஒரு நல்ல ஜோதிட நூலை வாங்கி படிக்கவேண்டும்.
எப்படி ஒரு காய் அல்லது கனியின் சுவையை ருசித்துப்பார்த்துதான் சுவை இன்னது என்று கூறமுடியுமோ அதுபோலவே ஜோதிடத்தைப்பற்றி ஜோதிடர்கள் கணித்துக்கூறும்போது, அதைப்பற்றி நாம் முழுமையாக உணர்ந்துகொள்ள ஜோதிடத்தின் அடிப்படைகளை நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

பழைய கால நூல்கள் தற்போதைய தமிழ் இருக்கும் நிலைக்கு புரிவதில்லை. எனவே அதை தற்கால தமிழுக்கு மொழிபெயர்த்துள்ள பல ஜோதிடர்களின் நூல்கள் தற்போது விற்பனையில் உள்ளது (எனக்கு தெரிந்து, ஒரு மொழியை அந்த மொழியை பேசுபவர்களுக்கே மொழி பெயர்த்து புரிய வைக்க வேண்டிய அவல நிலை, நம் தமிழ் மொழிக்கு உரிய பெருமை). அவற்றை வாங்கி பொறுமையாக புரியும்வரை மறுபடியும் மறுபடியும் படித்துப்பார்க்க வேண்டும்.

ஜோதிடத்தின் உண்மை நிலை நமக்கும் சிறிது புலப்படும்பிறகு ஜோதிடரிடம் சென்று நம் ஜாதகத்திற்கான பலனை தெரிந்துகொள்ள முயற்சிசெய்ய வேண்டும்.

கண்டிப்பாக ஒரே ஒரு ஜோதிடரிடம் சென்று வருவதின் மூலம் எதையும் அறிந்து கொள்ள முடியாது. மூன்று நான்கு பேரையாவது அதுவும் ஓரளவாவது ஜோதிடஞானம் உள்ளவர்களை தேர்ந்து எடுத்து பார்த்து வருவது நல்லது. தற்கால நிலை, வருங்கால நிலை என்ற இரண்டு நிலைகளையும் ஐயமின்றி கேட்டு தெரிந்து கொள்வது சிறந்தது.

ஏனென்றால் ஜோதிடம் என்பது, வாழ்வில் கஷ்ட நிலையில் உள்ள மனிதனுக்கும் உயர்ந்த நிலையில் உள்ள மனிதனுக்கும் எந்த நிலையும் ஒரு நாள் மாறும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக, மனிதர்களின் மூளைக்கு இறைவன் எட்டவைத்த விஷயம் என எனது சிற்றறிவுக்குப் படுகிறது.

மனிதர்கள் நம்பும் மூடநம்பிக்கைகள் எதையும் தனது மூலதனமாக வைத்து அவர்களிடம் அதை வளர்த்து மேலும் மேலும் பணம் சம்பாதிக்க நினைக்கும் கூட்டம் எல்லாதுறையிலும் நீக்கமற நிறைந்துள்ளதுபோல இந்த ஜோதிடத்துறையிலும் நிறைந்து காணப்படுகிறது. அவர்களிடம் இருந்து ஜோதிடத்தைக் காப்பாற்றுவதற்கே இன்று ஜோதிடர்களில் பலருக்கு நேரம் போதவில்லை. எனவே அதுபோன்றபோலியான நபர்களின் அர்த்தமற்ற கூற்றுகளை நம்பி ஏமாறாமல் இருக்க நாம் ஜோதிடத்தின் அடிப்படைகளை தெரிந்து கொள்வது நல்லது.

இந்த மாதிரி நபர்களுக்கு பயந்து ஜோதிடத்தின் பக்கம் செல்லாமல் இருப்பதும் தவறுதான். அதனால் நம் முன்னோர்கள் வருங்கால சந்ததியர்களுக்காக காலம் காலமாக கட்டிக்காத்து வந்த ஜோதிடத்தையும் அதன் மூலம் கிடைக்கும் பயனையும் நாம் இழந்துவிடுவோம்.

நிச்சயமாக ஜோதிடம் மனிதர்களின் நலனுக்காகவே நம்முன்னோர்கள் அவர்களின் வாழ்வின் இன்ப துன்பங்களைத் தொலைத்து இறைவன் மூலம் அறிந்து கொண்ட நல்ல விஷயம் என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது.

இது நான் படித்த ஜோதிட நூல்களின் மூலம் அறிந்து கொண்ட விஷயம்.
அதற்காக நம் வாழ்வின் ஒவ்வோரு நொடிப்பொழுதையும் கணித்து கூறவேண்டும் என எதிர்பார்ப்பது பேராசையாகவே இருக்கும். ஓரளவு நம் எதிர்காலத்தைப்பற்றி அறிந்துகொள்ள முடியுமே தவிர வேற எதையும் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில் முடியும்.

நம்மில் பலர் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் தங்களுக்கு பணம் நிறைய கிடைக்கவேண்டும் என்று வீண் ஆசைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்கள்.


அவர்கள் தங்களது பேராசையால் போலியான நபர்களின் ஆசைவார்த்தைகளை நம்பி தங்களிடம் உள்ள பொருட்களையும் இழக்கின்றனர். அதனால் ஜோதிடத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் இழக்கின்றனர். பிறகு இது போன்ற வேறு விஷயங்களை தேடி ஓடுகின்றனர்.


அவர்களின் இந்த தேடுதல் வேட்டை நிற்கவும் செய்யாது, அவர்களது பேராசை நிறைவேறவும் செய்யாது, அவர்கள் தங்களைப்பற்றி உணரும்வரை.

இன்று ஜோதிடத்தில் நமக்கு கிடைத்து இருப்பது மிக்குறைந்த விஷயங்களே. பலவிஷயங்கள் காலத்தின் ஓட்டத்தில் மறைந்து விட்டன. கிடைத்த விஷயங்களைகொண்டே இன்று ஜோதிடர்கள் பலனை கணித்துக்கூறிவருகின்றார்கள்.அதனால் அவர்களிடம் பெரிதாக எதிர்பார்ப்பது வீண் ஏமாற்றங்களையே நமக்கு தரும்.

ஜோதிடத்தை நம் வாழ்க்கையென்னும் கடலைக்கடக்க ஒரு துடுப்பாகபயன்படுத்தலாம். துடுப்பைவைத்துக்கொண்டு கடலிலேயேஉயிர்வாழ்ந்து விடலாம் என்பது எவ்வாறு தவறான முடிவோ அது போலவே ஜோதிடத்தை நம்பியே முழுவாழ்க்கையையும் ஓட்ட நினைப்பதும் தவறான முடிவு.

ஜோதிடத்தின் உதவியுடன் நம்மூளையையும் நல்லவழியில் பயன்படுத்தினால் ஜோதிடம் நமக்கு ஏமாற்றத்தைத் தராது. இதை ஜோதிட நூல்களை படிப்பதின்மூலம் நீங்களும் உணரக்கூடும்.

1 comment:

  1. ஒரு விஷயத்தைப்பற்றி முழுதும் தெரிந்துகொள்ளாமலேயே கருத்துக்கூறுபவர்கள் நம்மிடையே நிறைய பேர் உண்டு. அவர்கள் கண்டிப்பாக இதைப் படித்துப் பார்க்கவேண்டும்.

    ReplyDelete