படித்ததில் பிடித்தது-5

மெய்யுணர்வு தோண்றுவது எப்போது?
எது கிடைத்து விடுகிறதோ அது சாதாரணமாகத் தெரிகிறது.
எங்கே சுலபமாக வாழ்கிறோமோ, அங்கே பாலைவனமாகக் காட்சியளிக்கிறது.
ஒன்றில் நின்று கொண்டே இன்னொன்றை நோக்கிக் கொண்டிருக்கும் பொய்யான வாழ்க்கையிலேயே மனித வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது.

இருக்கும் இடமே இன்பமயமானது என்று சில நேரங்களில் தோன்றுகிறது.
அது ஒரு கட்டத்தில் ‘என்ன வாழ்க்கை’என்று அலுப்பாகி விடுகிறது.
பின் எதுதான் நிரந்தரமானது? எதுதான் நிலையான சுகம் தருவது.?

’நாம் அடைகின்ற மகிழ்ச்சியும் உண்மையானதல்ல. துயரமும் உண்மையானதல்ல’ என்கிறார் விவேகானந்தர்.

வாழ்நாள் முழுவதும் ஒரே காட்டில் இருந்து, ஒரே நதியில் குளித்து அதே காட்டில் சமாதியாகின்ற ஞானம் எல்லோருக்கும் வருவதில்லை.
இடம் விட்டு இடம் மாறும் சபலம், பெண் மாற்றி பெண் பார்க்கும் சலனம், வருவது போதாது மேலும் வேண்டும் என்ற தொடர்ச்சியான ஆசை. மனித வாழ்க்கை மரத்திலிருந்து உதிரும் இலைபோல் ஆடி ஆடிக்கொண்டே கிழே விழுகிறதே தவிரக் கல் விழுந்த மாதிரி நேராக விழுவதில்லை.
பொய்யான உணர்ச்சியால் விளைந்த ஜனனம் பொய்யான ஆசைகளால் உந்தபட்ட வாழ்க்கை முடிவில் சாக விரும்பாமல் சாகும் அவலம். இதுதான் மானிட ஜென்மம்.
தற்காலிக நிகழ்ச்சிகளுக்கு நிரந்தர முலாம் பூசுகின்றான்.  நிரந்தரமான நிலைகளிலே நிம்மதி இல்லாமல் தவிக்கிறான்.

இந்த மனதில் மெய்யுணர்வு தோண்றுவது எப்போது?
மெய்யுணர்வு காணல் நீர் என்பதை உணர உணர மெய்யுணர்வு தொடங்கும்.  அது அனுபவத்தால் மட்டுமே அறியப்படும்.
மெய்யுணர்வு தோண்றிவிட்டால் இனிப்பில்லை கசப்பில்லை விருப்பில்லை வெறுப்பில்லை ஜனனத்திலே சந்தோஷமில்லை, மரணத்திலே துக்கமில்லை.  அடிமேல் அடி விழுந்தலும்கூட அது கல்லிலே விழுந்த அடியாக இருக்குமே தவிர சதையிலே விழுந்த அடியாக இருக்காது.
அழுவதன் மூலம் தடுக்கக்கூடியது ஏதுமில்லை.  சிரிப்பதன் மூலம் அடையக் கூடியது ஏதுமில்லை. துடிப்பதன் மூலம் எந்த பரிகாரமும் கிடைப்பதில்லை.
கல்லாக இருந்து மனிதனாக வாழ்வதே மெய்யுணர்வு. மனிதனாக இருந்து ஞானியாக வளர்வதே மெய்யுணர்வு.
மெய் என்பது உடம்பையும் குறிக்கும், ’உண்மை’யையும் குறிக்கும்.  ஆனால் ’உடம்பு’ என்பது உண்மையல்ல.
மெய்யுணர்வு உடல் உணர்வைக் குறிப்பதல்ல. உண்மை உணர்வைக் குறிப்பது.
காலா காலங்களுக்கு நிம்மதியை விரும்புகிற மனிதனுக்கு இந்த மெய்யுணர்வே சரியான வழி.

No comments:

Post a Comment