படித்ததில் பிடித்தது-4

எங்கே நிம்மதி
உங்கள் நிம்மதியின்மைக்கு நூறு சதவிதம் நீங்கள்தான் பொறுப்பாளி.
கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறவர்களும் உண்டு.
மூன்றுவேளைக்கும் திண்டாட்டம் போடுகிறவர்கள் சாகிறவரை எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பவர்களும் உண்டு.
வாழ்க்கையில் முதல் முறையாக நாம் எப்பொழுது நிம்மதியை இழக்க ஆரம்பிக்கிறோம்?

பாதுகாப்பைத் தேட ஆரம்பிக்கும்போதுதான். அதிக பணம், அதிக புகழ் இருந்தால் பாதுகாப்பு உணர்வோடு இருக்கலாம் என்கிற எதிர்பார்பில் நம்முடைய வாழ்க்கைச் சக்கரம் முடுக்கிவிடப்படுகிறது.  எதையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கும் என்ற விதை அடி மனதில் தோன்றி விடுகிறது.  பாதுகாப்பின்மையை எதிர்த்தே வாழப்பழகியதின் பக்க விளைவாக மனிதனைத் தொற்றிக்கொண்ட குணம்தான் பற்றுதல்.  இது எனது, என்னுடையது என்ற பிரயோசனமில்லாத உணர்வுதான் அது.
நிஜப்பற்று பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால், பலரின் மனப்பற்றுதான் பல கஷ்டங்களையும் இன்னல்களையும் உண்டாக்குகிறது.
நிஜப்பற்று நிதர்சனத்தை உண்மையை அடிபடையாகக் கொண்டது.  மனப்பற்று உங்கள் மனதை அடிப்படையாகக் கொண்டது.
நிஜப்பற்று: உண்மையான ஈடுபாட்டோடு  உங்களுடைய பொருட்களை முழுமையாக அனுபவிப்பது. உங்களுடைய சொந்தங்களை நண்பர்களை முழுமையாக புரிந்துகொண்டு அவர்களோடு இனிமையான அன்பும் உறவும் கொண்டிருப்பது. முழுமையாக வாழ்வதுதான் நிஜப்பற்று.
மனப்பற்று: பெருமைக்காக புகழுக்காக ஆடம்பரமாக உங்களுடைய பொருட்களை விரயம் செய்வது பொறுமையின்மையால் வெறுப்பால், சலிப்பால், கர்வத்தால் உங்களுடைய சொந்தங்களையும் நண்பர்களையும் முழுமையாக புரிந்த்து கொள்ளாமல் கடமைக்காக வாழ்வதுதான் மனப்பற்று.
நீங்கள் எற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளவிட்டாலும் நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்கள் நிம்மதியைகுலைப்பது உங்கள் பற்றுதல்தான்.  எந்த அளவிற்கு பாதுகாப்பு உணர்வை விரும்புகிறீர்களோ அந்த அளவுக்கு உங்கள் சொந்தங்களையும், சொத்துக்களையும் அதிகப்படுத்த ஆரம்பிப்பீர்கள்.
இந்த உலகில் எல்லாமே மாறும்.  மாறிக்கொண்டே இருக்கும். எதுவும் எப்பொழுதும் நிரந்தரம் இல்லை. யாரும் யாருக்கும் முழு உடமையும் அல்ல.  எல்லோரும் தனித்துவம் கொண்டவர்கள் எந்த நிமிடமும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதே நிதர்சனமான உண்மை.
இதைப் புரிந்துகொண்டால் போதும் யாரும் எந்த சூழ்நிலையிலும் உங்கள் நிம்மதியைக் குலைக்க முடியாது.

No comments:

Post a Comment